சாய் பல்லவி நடித்த 'தண்டேல்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

சந்து மொண்டேட்டி இயக்கிய தண்டேல் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-02-10 15:47 IST

சென்னை,

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த 7-ந் தேதி வெளியான படம் 'தண்டேல்'. இப்படத்தை 'கார்த்திகேயா 2' திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இயக்கியுள்ளார். இதில் பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 2019-ம் ஆண்டு ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

இந்த நிலையில், தண்டேல் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

மீனவர் நாக சைதன்யாவும் சாய் பல்லவியும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள். மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் நாக சைதன்யாவும் அவரது குழுவினரும் வழிதவறி பாகிஸ்தான் கடல் பகுதிக்கு சென்று விடுகின்றனர். இதையடுத்து அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இதனால் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. நாக சைதன்யாவும் அவரது குழுவினரும் நாடு திரும்ப முடிந்ததா? சாய்பல்லவியை கரம் பிடித்தாரா? என்பது மீதி கதை.

 நாக சைதன்யா கதாபாத்திரமாகவே மாறியிருப்பது சிறப்பு. இன்பம், துன்பம், ஏமாற்றம், வலி என அத்தனை உணர்வுகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்துள்ளார். சண்டை காட்சிகளில் வேகம். எதிர்பார்த்தது போலவே சாய் பல்லவி தனது கதாபாத்திரத்தை மீண்டும் ஜொலிக்க வைத்துள்ளார். அவரது யதார்த்தமான நடிப்பு கதைக்கு ஆழம் சேர்க்கிறது. நாக சைதன்யா மீதான அவரது அன்பையும் உணர்வுகளையும் நம்பமுடியாத அளவிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ஆடுகளம் நரேன், பப்லு பிருதிவிராஜ், பாகிஸ்தான் சிறை அதிகாரியாக வரும் பிரகாஷ் பெலாவடி, நாகசைதன்யாவின் அம்மாவாக வரும் கல்பலதா ஆகியோரும் கதாபாத்திரங்களில் நிறைவு. ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்து மிகச் சிறப்பாக மெருகூட்டியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் மனதுக்கு பரவசம். பின்னணி இசை கதையின் உணர்வை ஆழமாக வெளிப்படுத்துகிறது.

இரு நாடுகளிடையே தவிக்கும் காதலர்களின் கிளர்ச்சியூட்டும் உணர்வுகளையும், தாய்நாட்டின் மீதான தேச பக்தியையும் வார்த்தைகளாக வடித்திருக்கும் வசனகர்த்தா வி.பிரபாகரன் பணி சிறப்பு. தாக்கத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தான் சிறைப்பகுதி காட்சிகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். வழக்கமான காதல் கதையில் தேச பக்தியை கலந்து ரசிக்கும்படியான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் சந்து மொண்டேட்டி.

 

Tags:    

மேலும் செய்திகள்