நடிகர், நடிகைகளுக்கு கர்நாடக அரசு விருது; முதல்-மந்திரி சித்தராமையா வழங்கினார்
கலைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய நடிகர், நடிகைகளுக்கு கர்நாடக அரசு சார்பில் முதல்-மந்திரி சித்தராமையா விருது வழங்கி கவுரவித்தார்.;
கோப்புப்படம்
மைசூரு,
மைசூரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் நடந்த திரைப்பட விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கடந்த 2018-2019-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் உள்பட கலைத்துறையில் சிறப்பான முறையில் பங்காற்றிய 28 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு நடிகர்-நடிகைகளுக்கு விருது வழங்கினார்.
அதன்படி மறைந்த நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், இயக்குனர் புட்டண்ணா கனகால் ஆகியோரின் பெயர்களில் முதல்-மந்திரி சித்தராமையா விருது வழங்கினார். இதில் சிறந்த நடிகருக்கான விருது சீனிவாசன்மூர்த்திக்கும், சிறந்த நடிகைக்கான விருதை உமாஸ்ரீயும் பெற்றனர்.
அதுபோல் சிறந்த இயக்குனருக்கான விருதை சேஷாத்திரி, நஞ்சுண்டேகவுடா ஆகியோருக்கும், டாக்டர் விஷ்ணுவர்தன் சிறப்பு விருதை இயக்குனர் பசவராஜ், ரிச்சர்ட் கேஸ்ட்ரோலினா ஆகியோருக்கும் முதல்-மந்திரி சித்தராமையா வழங்கினார். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம், 50 கிராம் எடைகொண்ட தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது.
மேலும் சிறந்த தயாரிப்பாளர்கள், கேமராமேன்கள், குணச்சித்திர நடிகர்கள் உள்பட 28 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அவர்களுக்கு சால்வை அணிவித்து தங்கப்பதக்கம் மற்றும் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கி முதல்-மந்திரி சித்தராமையா கவுரவித்தார். விழாவில் நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக விழாவில் பேசிய முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:- திரைத்துறை பொதுமக்களையும், சமுதாயத்தையும் பெரிய அளவில் ஈர்க்கும் ஒரு இடகமாகும். சமூகம் மீது அக்கறை காட்டும் திரைத்துறை, நல்ல தகவல்களை கொடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள், பொதுமக்களுக்கு நல்வழி காட்டும் வகையில் திரைப்படங்கள் உருவாக வேண்டும்.
இத்தனை ஆண்டுகளாக திரைத்துறையினருக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு காரணம் முன்பு இருந்த அரசு இந்த விழாவை நடத்தவில்லை என்பது தான். இங்கு திரண்டிருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட அனைவரையும் நேரில் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கூடிய விரைவில் 2020-2021-ம் ஆண்டுக்கான திரைத்துறை விருது வழங்கும் விழா நடத்தப்படும். மைசூருவில் சினிமா நகரை உருவாக்க நஞ்சன்கூடு அருகே 160 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளோம். அங்கு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் சினிமா நகரம்போல் சினிமா நகரம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.