ஆஸ்கர் விருது விழாவின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற யூடியூப்
2029-ம் ஆண்டு முதல் 2033 வரை ஆஸ்கார் விருதுகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமத்தை யூடியூப் பெற்றுள்ளது.;
திரைத்துறையினருக்கு வழங்கப்பட்டும் மிகப்பெரிய விருது மற்றும் அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வை இதுவரை அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சி சேனலே நேரடியாக ஒளிபரப்பி வருகிறது.2028 வரை ஆஸ்கார் விழாவை ஒளிபரப்பும் உரிமையை ஏபிசி தொலைக்காட்சி நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. 2028-ல் ஆஸ்கார் விருதின் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் 2029-ஆம் ஆண்டு முதல் 2033 வரை ஆஸ்கார் விருதுகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை யூடியூப் தளம் பெற்றுள்ளது. கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்த காலத்தில் பிரபலங்களின் சிவப்பு கம்பள வரவேற்பு, விருதளிக்கும் நிகழ்வு என ஆஸ்கார் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் யூடியூப்பில் மட்டுமே வெளியாகும். இதற்காக யூடியூப்பில் பிரத்யேக டிஜிட்டல் தளம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. இதன்படி ஆஸ்கார் விருதுகள் விழா உலகெங்கிலும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இந்த மாற்றத்தினால் ஆஸ்கார் விருதுகளின் பார்வையாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆஸ்கார் விருதுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தரும் என்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைச் சென்றடைய இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று ஆஸ்கார் அகாடெமி தெரிவித்துள்ளது. இது அதிகப்படியான ரசிகர்களைச் சென்றடையவும் கலாசார நிகழ்வுகளை விரிவுப்படுத்தவும் அகாதெமி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.