திரைப்படமாகும் கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் பயோபிக்
நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாற்று படத்தை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார்.;
இந்தியாவில் இருந்து பார்முலா 1 கார் பந்தயத்தில் பங்கெடுத்தவர் நரேன் கார்த்திகேயன். எப் 1 கார்பந்தயத்தில் புள்ளிகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையும் படைத்துள்ளார். பல்வேறு கார் பந்தயப் போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளை வென்றுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது.
நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை வரலாற்று படத்தினை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார். இதற்கான கதையினை 'சூரரைப் போற்று' படத்தின் கதையில் பங்கெடுத்த ஷாலினி உஷா தேவி எழுதியிருக்கிறார். இப்படத்தினை ப்ளூ மார்பில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் நரேன் கார்த்திகேயனாக யார் நடிக்கவிருக்கிறார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இப்படத்தில் கோயம்புத்தூரில் பிறந்த ஒரு பையன் எப்படி 'எப்1' பந்தயம் வரை பயணித்தான் என்று சொல்ல முடிவு செய்திருக்கிறார்கள். நரேன் கார்த்திகேயன் அவரது தந்தையிடம் எடுத்த பயிற்சி, 15 வயதில் போட்டிகளில் பங்கெடுத்தது, பிரான்ஸ் நாட்டில் பயிற்சி எடுத்தது, அங்கு அவருக்கு ஏற்பட்ட இனவெறி பாதிப்பு, அவரது வெளிநாட்டு போட்டிகளில் பெற்ற வெற்றி உள்ளிட்ட அனைத்துமே இடம்பெறவுள்ளது.
மேலும், அவருடைய காதல் இந்தப் பயணத்துக்கு எப்படி உறுதுணையாக இருந்தது என்று கூறவுள்ளார்கள். இந்தப் படம் தொடர்பாக நரேன் கார்த்திகேயன், "மோட்டார் ஸ்போர்ட்தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. தற்போது இப்படம் அந்தக் கதையை உலகிற்கு கொடுக்கிறது." என்று தெரிவித்துள்ளார். தற்போது இதில் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.