"தி பாரடைஸ்" படத்தில் இணைந்த மோகன்பாபு
நானியின் 33-வது படமான ‘தி பாரடைஸ்’ திரைப்படம் 2026 ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படங்கள் அமோக வெற்றியைப் பெற்றன. அதன் பின்னர் வெளியான 'தசரா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். 'ஹிட் 3' படத்தைத் தொடர்ந்து, 'தி பாரடைஸ்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி வருகிறது படக்குழு. நானியின் திரையுலக வாழ்வில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இது.
தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. தனது தயாரிப்பு, மகன் விஷ்ணு மஞ்சு நடிக்கும் படம் உள்ளிட்டவற்றில் மட்டுமே சமீபமாக மோகன் பாபு நடித்து வந்தார். நீண்ட வருடங்கள் கழித்து மற்றொரு நடிகரின் படத்தில் மோகன்பாபு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நானி, மோகன் பாபு, பாபு மோகன், ராகவ் ஜூயல் உள்ளிட்ட பலர் 'தி பாரடைஸ்' படத்தில் நடித்து வருகிறார்கள்.
சுதாகர் தயாரித்து வரும் இப்படத்தினை 'தசரா' இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கி வருகிறார். 'அமரன்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சாய் ஒளிப்பதிவாளராகவும், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.