துளுநாடு மக்கள் தெய்வத்தை விமர்சித்த விவகாரம்.. நடிகர் ரன்வீர்சிங் மீது போலீசில் புகார்

துளுநாடு மக்கள் தெய்வத்தை விமர்சித்த விவகாரத்தில் நடிகர் ரன்வீர்சிங் மீது பெங்களூரு போலீஸ் நிலையத்தில் வக்கீல் புகார் அளித்துள்ளார்.;

Update:2025-12-04 07:31 IST

பெங்களூரு,

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான ‘காந்தாரா சாப்டர்-1’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களில் துளுமொழி பேசும் மக்களின் தெய்வமாக விளங்கும் தெய்வா சாமியை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார்.

அப்போது நடிகர் ரிஷப் ஷெட்டி முன்னிலையிலேயே தெய்வா கடவுளை அவமதிக்கும் வகையிலும், தெய்வா சாமி ஒரு பெண் தெய்வம் என்றும் ரன்வீர் சிங் பேசி இருந்தார். இதற்காக துளுமொழி பேசும் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதால், ரன்வீர் சிங் நேற்று முன்தினம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு இருந்தார். துளுமக்களின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

ரன்வீர்சிங் மன்னிப்பு கேட்டதால், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் நடிகர் ரன்வீர் சிங் மீது வக்கீல் பிரசாந்த் மதல் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், நடிகர் ரன்வீர் சிங் பேச்சு, நடவடிக்கை லட்சக்கணக்கான இந்துகள் மற்றும் கர்நாடகத்தில் துளுமொழி பேசும் மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. அதனால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த புகாரை போலீசார் பெற்றுக்கொண்டனர். புகார் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஐகிரவுண்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்