‘16 வயதினிலே படத்தில் நடித்தபோது ரஜினிக்கு தமிழ் பேச வராது’ - பாக்யராஜ் பகிர்ந்த தகவல்
சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை என பாக்யராஜ் தெரிவித்தார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி அவரை கவுரவிக்கும் விதமாக சென்னையில் இன்று சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் பேசியபோது பாக்யராஜ் கூறியதாவது;-
“சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. சினிமாவிற்கு வருவதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் குணாதிசயங்களும், ஒருவருக்கு கஷ்டம் என்றால் அவர் எப்படி உதவுவார் என்பதும் எனக்கு மனதில் நன்றாக பதிந்திருந்தது.
நடிகர் சிவாஜி சின்ன இயக்குநராக இருந்தாலும் அவர்களிடம் சென்று, ‘சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்பார். அதேபோல் 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.55 மணிக்கு படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்.
கமல்ஹாசனின் நடிப்பு நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே என்னை கவர்ந்தது. 16 வயதினிலே படத்தில் நடித்தபோது ரஜினிக்கு அவ்வளவாக தமிழ் பேச வராது. என்னிடம் வசனங்களை சுமார் 10 தடவை சொல்ல சொல்வார். நான் சொன்ன பிறகு மரத்தடியில் நின்று பலமுறை சொல்லிப்பார்த்து மனப்பாடம் செய்வார்.
அன்புள்ள ரஜினிகாந்த், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் பார்த்தபோது மட்டுமின்றி, இன்றுவரை அவ்வளவு சிரத்தை எடுத்து நடித்து வருகிறார். ஒரு வெப் தொடர் மற்றும் படம் இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த வருடம் புது உத்வேகத்துடன் படங்கள் செய்யலாம் என நினைத்துள்ளேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.