டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு பொறுப்பேற்க தயார் - மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.;
சென்னை,
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதற்கிடையில், காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக பதிவுகளையும் ஜாய் கிரிசில்டா வெளியிட்டிருந்தார்.
தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்குத் தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான் தந்தை என டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்க தயார் என சென்னை ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு தெரிவித்துள்ளது.