ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ரசிகர்களுடன் பேசும் சன்னி லியோன்
சன்னி லியோன் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கும் ‘கவுர் & கோர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.;
திரை உலகில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். சன்னிலியோன் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக இருக்கும் ‘கவுர் & கோர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் சூப்பர் ஹீரோயினாக 2 கேரக்டர்களில் அவர் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோட்வானே ஆகியோர் ஏ.ஐ. பயன்பாட்டை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர். இதற்கு பதிலளித்த நடிகை சன்னிலியோன், ஏ.ஐ. சினிமாவை மாற்றும். ஆனால் அது மனிதர்களின் படைப்பாற்றலை அழிக்காது. அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோட்வானே ஏ.ஐ.க்கு எதிராக கருத்துக்கள் கூறி இருக்கிறார்கள். அவர்களது பார்வையை நான் மதிக்கிறேன். ஆனால் நான் நம்புவது ஏ.ஐ. புதிய வேலைவாய்ப்புக்களையும் புதிய முயற்சிகளையும் உருவாக்கும். டீப்பேக் என்பது பல வருடங்களாக இருக்கும் பிரச்சினை. என் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தவறாக பயன்படுத்திய சம்பவங்கள் நடந்து உள்ளன.
இளம் பெண்கள் மற்றும் சாதாரண மக்கள் டீப்பேக் பிரச்சினையில் சிக்கும் போது கடும் பாதிப்பு ஏற்படும். இத்தகைய மோசடிகளை சகித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சைபர்செல் மற்றும் சட்ட நடைமுறைகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம். நான் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ரசிகர்களுடன் பேசுவதற்காக ஏ.ஐ. அவதார் என்ற தளத்தை தொடங்கி இருக்கிறேன். எனது ஏ.ஐ. அவதார், ரசிகர்களுடன் 24/7 தொடர்பில் இருக்க உதவும். உலகில் எங்கிருந்தாலும் என்னிடம் அவர்கள் பேச முடியும் என்றார்.