ரேணுகாசாமி கொலை வழக்கில் 2-வது முறையாக 100 நாட்களை சிறையில் கழித்த நடிகர் தர்ஷன்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.;
பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இதே சிறையில் தர்ஷனுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதாக பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிறைவாசம் அனுபவித்த தர்ஷன் முதுகு வலியால் அவதிப்பட்டார். இதனால் அவருக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, பல்லாரி சிறையில் இருந்து அவர் வெளியே வந்தார். அப்போது அவர் 100 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து இருந்தார்.
ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி தர்ஷனின் ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால், அன்றைய தினமே அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதன் மூலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டு 100 நாட்கள் தாண்டியுள்ளது. இதனால் 2-வது முறையாக நடிகர் தர்ஷன் 100 நாட்கள் சிறைவாசத்தை நிறைவு செய்துள்ளார். அவர் சிறையில் 2-வது முறையாக 100 நாட்களை கடந்திருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது