வீடு தேடி வந்த இயக்குனரை நெகிழ வைத்த டி.ராஜேந்தர்

அறிமுக இயக்குனருக்கு பணம் வாங்காமலேயே தன் பாடலை பயன்படுத்திக்கொள்ள டி.ராஜேந்தர் அனுமதி அளித்தார்.;

Update:2025-09-11 09:27 IST

சென்னை,

பழைய படங்களின் ‘ஹிட்' பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்துவது தற்போதைய இயக்குனர்களின் ‘டிரெண்ட்' ஆகி வருகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி' படத்தில் கூட, தேவா இசையமைத்த ‘கல்லூரி வாசல்' படத்தில் இருந்து ‘லயோலா காலேஜ் லைலா...' என்ற பாடல் இடம்பிடித்திருந்தது.

இதற்கிடையில் அறிமுக இயக்குனர் சசிகுமார் என்பவர் தான் இயக்கும் புதிய படத்தில் காதல் காட்சி ஒன்றில் பழைய ‘ஹிட்' பாடலை பயன்படுத்த முடிவு செய்தார். அதற்காக டி.ராஜேந்தர் எழுதி, இசையமைத்து, இயக்கிய ‘உயிருள்ளவரை உஷா' படத்தில் இடம்பெற்ற ‘வைகைக்கரை காற்றே நில்லு...' என்ற பாடலுக்கான அனுமதியை பெற, டி.ராஜேந்தர் வீட்டுக்கு நேரில் சென்றார்.

படத்தின் கதையை கேட்டு பாராட்டிய டி.ராஜேந்தர், பணம் வாங்காமலேயே தன் பாடலை பயன்படுத்திக்கொள்ள சசிகுமாருக்கு அனுமதி அளித்தார். மேலும் அந்த இயக்குனரை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு செல்போனையும் பரிசளித்தார்.

அந்த பாடலின் உரிமத்தை இதுவரை எவருக்கும் விற்காமல் இன்றுவரை தன்னிடம் வைத்துள்ள டி.ராஜேந்தர், பணம் எதுவும் வாங்காமல் பாடல் அனுமதி தந்ததுடன், செல்போனை பரிசளித்ததால் சசிகுமார் வியப்பில் வாயடைத்து போனார். இதனை தனது சமூக வலைதளத்திலும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். வீடு தேடி வந்த இயக்குனரிடம், ‘எனக்கு வேணாம் நோட்டு... சந்தோஷமா எடுத்துக்கோ என் பாட்டு...' என்ற ரீதியில் அசரவைத்த டி.ராஜேந்தருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்