எனக்கு நடிப்பு ஆசை அதிகரிக்க அந்த நடிகர்தான் காரணம்- பிரியாலயா
‘டிரெண்டிங்’ படத்தை தொடர்ந்து நடிகை பிரியாலயாவிற்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.;
சேலத்தை சேர்ந்தவர் நடிகை பிரியாலயா. சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டிரெண்டிங்’ படத்தில் கலையரசனுடன் நடித்திருந்தார். இந்தப்படம் இப்போது ஓ.டி.டி.யில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் நடிகை பிரியாலயா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது- சிறப்பான கலைஞர்களுடன் இணைந்து நடிக்கவும் ஆவலாக இருக்கிறேன். சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்தபோது கிடைக்காத மனதிருப்தி, நடிப்பில் எனக்கு கிடைக்கிறது. ‘டிரெண்டிங்’ படத்தில் நடித்தது, அந்த எண்ணத்தை மேலும் வலுப்பெறச் செய்திருக்கிறது. பணமும், புகழும் ஒரு கலைஞருக்கு தேவை என்றாலும், அதைவிடவும் ஒரு வேலையில் கிடைக்கும் மனதிருப்தியை, முக்கியமாக, முதன்மையாக கருதுகிறேன்.
பள்ளி, கல்லூரியில் படித்த போது நான் சிம்பு ரசிகை. அவர் படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன். இப்போதும் எனக்கு சிம்பு விருப்பமான நடிகர் என்றாலும், நடிப்பு என்று வந்தபின் நான் பார்த்து ஆச்சரியப்படும் நடிகராக இருப்பவர் சியான் விக்ரம். அவர் நடித்து சில படங்கள் வெற்றி பெறாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தப் படங்களிலும் கூட விக்ரமின் நடிப்பு அசாத்தியமானதாக இருந்திருக்கும். எனக்குள் நடிப்பு ஆசை அதிகரிக்க விக்ரம்தான் காரணம்.
கதாபாத்திரத்திற்கு தேவையானதை ஒரு நடிகையாக செய்துதான் ஆக வேண்டும். ஆனால் நான் மிகவும் கவர்ச்சியான வேடங்களை ஏற்பதில்லை. திறமைக்குதான் இங்கே மதிப்பு என்று நம்புகிறேன். கவர்ச்சியே கூடாது என்று நான் சொல்லவில்லை. அது முகம் சுழிக்காத வகையில், இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நடனம்தான் என்னுடைய ‘டயட்’. எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் அவை அளவுடன் இருக்க வேண்டும். எனக்கு ஊர் சுற்றுவதில் விருப்பம் குறைவு. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் என்னுடைய சொந்த ஊரில் இருப்பேன். அப்பாவுடன் நேரம் செலவழிக்க விரும்புவேன்” என்றார்.