98வது ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனையில் ‘கெவி’ திரைப்படம்
மலைவாழ் மக்கள் வாழ்வியலை மையமாக கொண்டு உருவான கெவி படம் ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.;
தமிழ் தயாளன் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி வெளியான படம் கெவி. இதில் அறிமுக நடிகர் ஆதவன் நாயகனாக நடித்திருந்தார். மேலும், ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ராசி தங்கதுரை வசனம் எழுதிய இந்தப் படத்துக்கு ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்திருந்தார். பாலசுப்பிரமணியன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கொடைக்கானல் அருகிலுள்ள மலைவாழ் மக்கள் வாழ்வியலை மையமாக கொண்டு உருவான இந்த படம் திரையரங்குகளில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தமிழ் தயாளன் இயக்கிய கெவி படம் 98-வது ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கிரிதரன் இயக்கிய 'தலித் சுப்பாயா: ரெபெல்'ஸ் வாய்ஸ்' ஆவணப்படமும் ஆஸ்கர் விருதுகளுக்கான ரேஸில் இணைந்துள்ளன. இந்த 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா, 2026 மார்ச் 15 அன்று அமெரிக்காவின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.