மீண்டும் இணையும் 'குடும்பஸ்தன்' பட கூட்டணி!
நடிகர் மணிகண்டன் மற்றும் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி நேரில் சந்தித்து புதிய படம் தொடர்பாக பேசியுள்ளனர்.;
சென்னை,
தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூல் இப்படம் ஓ.டி.டி.யிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து 'குடும்பஸ்தன்' பட கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நடிகர் மணிகண்டன் மற்றும் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி நேரில் சந்தித்து புதிய படம் தொடர்பாக பேசியுள்ளனராம். இவர்களது கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் இதில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.