“பராசக்தி” படத்தின் வீரியம் டிரெய்லர் வெளியாகும்போது தெரியும் - ஜிவி பிரகாஷ்
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் வரும்10ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ந் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. முதல் பாடலான ‘அடி அலையே’ , 2வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
‘பராசக்தி’ படம் குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “20 வருட இசை பயணத்தில் ‘பராசக்தி’ எனது 100வது படம். என் முதல் படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். 50-வது படத்தில் நடிகர் விஜய்க்கு இசையமைத்தேன். 100-வது திரைப்படமாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளேன். முதல் படத்தில் பாடல் எழுதியிருந்தேன். தற்போது, 100-வது படத்திலும் பாடல் எழுதியுள்ளேன். இந்த 20 ஆண்டுகளில் 100 திரைப்படங்களுக்கு இசையமைத்ததற்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. ‘பராசக்தி’ படத்தின் முழு வீரியம் டிரெய்லர் வெளியாகும்போது தெரியும். அதில் நாங்கள் இன்னும் சில விஷயங்களை ஒளித்து வைத்திருக்கிறோம். அது வெளியாகும்போது வெடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.