மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்- சுரேஷ் கோபி

சினிமாவில் தொடர்ந்து நடிப்பதே ஆசை என்று மத்திய இணையமைச்சரும் மலையாள நடிகருமான சுரேஷ் கோபி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.;

Update:2025-10-12 20:45 IST

திருச்சூர் தொகுதி எம்.பி.யாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெட்ரோலிய துறை இணையமைச்சராக பதவி வகிகிறார் சுரேஷ் கோபி. கேரளா மாநிலத்தில் இருந்து தேர்வாகி இருக்கும் முதல் பா.ஜ.க. எம்.பி. என்ற பெருமையை சுரேஷ் கோபி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், கண்ணூரில் இன்று நடைபெற்றதொரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சுரேஷ் கோபி, அமைச்சர் பதவி வேண்டாம் என்றார். அவர் பேசியதாவது, “தேர்தல்களுக்கு முந்தைய நாள் வரை ஒரு அமைச்சராக வேண்டாம் என்றே பத்திரிகையாளர்களுடன் பேசும்போது தெரிவித்திருந்தேன்; சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும். எனக்கு இப்போது வருமானம் வெகுவாகக் குறைந்துவிட்டது; ஆகவே, நிறைய சம்பாதிக்க வேண்டும். அந்த வருமானத்தில் குறைந்தபட்சம் சிலருக்காவது உதவிட வேண்டும். இந்தக் கட்சியிலுள்ள இளைய உறுப்பினர்களுள் ஒருவனே நான். 2016 அக்டோபரில் நான் இக்கட்சி உறுப்பினராக சேர்ந்தேன். அதன்பின், கேரளத்திலிருந்து முதல்முறையாக மக்களால் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கட்சியைச் சேர்ந்த முதல் ஆள் நானாவேன். அதற்காக கட்சியிலிருந்து என்னை அமைச்சராக்கியுள்ளனர். என்னைவிட இந்த அமைச்சர் பதவிக்கு, கேரள பாஜகவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகியுள்ள சதானந்தன் மாஸ்டர் பொருத்தமானவர்” என்றார்

Tags:    

மேலும் செய்திகள்