'யோலோ' படம் எப்படி இருக்கிறது?- சினிமா விமர்சனம்

இயக்குனர் சாம் இயக்கிய இயக்குனர் 'யோலோ' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-09-15 16:17 IST

'யோலோ' என்ற யூ-டியூப் சேனல் நடத்தி வரும் தேவ், தனது சேனல் மூலம் பொதுமக்களை பயமுறுத்தும் பிராங்க் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இன்னொரு புறம், தேவிகாவை பெண் பார்க்க குடும்பத்துடன் செல்கிறார், வி.ஜே.சிக்கி. அங்கே தேவிகாவை பார்த்து, 'ஏம்மா... உனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதே... அப்புறம் எப்படி...?', என்று நிக்கியின் அக்கா கேட்க அதிர்ச்சி பிறக்கிறது.

இதனை திட்டவட்டமாக தேவிகா மறுக்க, பெங்களூருவில் தேவிகாவும், அவரது கணவர் தேவும் சுற்றித்திரிந்ததை நிக்கியின் அக்கா விளக்குகிறார். இதுதொடர்பான விசாரணையில் தேவ் - தேவிகா இடையே திருமணம் ஆனதற்கான பதிவு ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன.

தனக்கு தெரியாமல் திருமணம் நடந்தது எப்படி? என்று தேவிகா குழம்பி போகிறார். உண்மையை கண்டறிய களத்தில் இறங்குகிறார். தேவ் - தேவிகா இடையே திருமணம் நடந்தது உண்மையா? அதன் பின்னணி? திருமணம் நடந்தது தேவிகாவுக்கு தெரியாவமல் இருந்தது எப்படி? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் அழகாக தெரிகிறார், தேவ். காதல், காமெடி , நடனம் , ஆக்‌ஷன் என அனைத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். தேவிகா அழகுப்பதுமையாக வந்து, அளவான நடிப்பால் கவருகிறார்.

படவா கோபி நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்டிங். வி.ஜே.நிக்கி, ஆகாஷ் பிரேம்குமார், கிரி துவாரகேஷ், யுவராஜ் கணேசன், சுவாதி நாயர், பூஜா ஆகியோரின் நடிப்பிலும் குறைவில்லை. சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும், சகீஷனா சேவியர் இசையும் படத்தை கவனிக்க வைக்கின்றன. கதையுடன் நகர்த்தி செல்கின்றன.

ஜாலியான காதல் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், பொறுமையிழக்கும் திரைக்கதை பலவீனமாக அமைகிறது. ஜாலி மட்டுமே குறிக்கோளாக கொண்டு, லாஜிக் மீறல்களை பற்றி கவலைப்படாமல் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார், இயக்குனர் சாம்.

யோலோ - புரியாத புதிர்.

Tags:    

மேலும் செய்திகள்