"திரள்" சினிமா விமர்சனம்

இயக்குனர் மனோஜ் கார்த்தி இயக்கிய திரள் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-09-24 06:40 IST

சென்னை,

தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ரவி பிரகாஷ், மக்கள் நலனுக்கான ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். இதற்கிடையே அவரது திட்டத்தில் கிடைக்கும் பணத்தில் பங்கு கேட்டு மர்ம ஆசாமி ஒருவர் மிரட்டுகிறார். இந்தநிலையில் ஒரு மது விருந்தில் அவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்படுகிறார். அவரை சுட்டு கொன்றது யார்? கொலைக்கான பின்னணி என்ன? திட்டத்தில் பங்கு கேட்டு மிரட்டல் விடுத்த ஆசாமி யார்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

ஆராய்ச்சியாளராக வரும் ரவி பிரகாஷ், பரபரப்பான பேர்வழியாக, எதார்த்தமான நடிப்பால் கவருகிறார். எமோஷனல் காட்சிகளிலும் முடிந்தவரை அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் யுவன் மயில்சாமி மிடுக்கான நடையாலும், துடிப்பான நடிப்பாலும் அசத்துகிறார்.

வில்லத்தனத்தில் வெங்கடேஷ் ரவிச்சந்திரன் நடிப்பு மிரட்டல். மீரா ராஜ், அல்பியா, தமிழினி, சேரன் ராஜ், சாப்ளின் பாலு, நித்தின் ஆகியோரின் நடிப்புக்கு பாராட்டு தரலாம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் எடுக்கப்பட்டிருந்தாலும், ஒளிப்பதிவில் தெளிவான வேலையை செய்துள்ளார் அபி ஆத்விக். ஏ.இ.பிரசாந்தின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு துணை நின்றுள்ளது. பாடல்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். சுமார் ரகம் தான்.

பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். ஆனால் ரவி பிரகாஷ் என்ன மாதிரியான ஆராய்ச்சியாளர்? அந்த ஆராய்ச்சியின் பயன் என்ன? போன்றவற்றை விரிவாக கூறாதது ஏன்? அனுமானங்களுக்கே சில காட்சிகளை விட்டது போல இருக்கிறது. சலிப்பு தட்டும் திரைக்கதை பலவீனம்.

குறிப்பிட்டுச் சொல்ல சில குறைகள் இருந்தாலும், விறுவிறுப்பு குறையாமல் காட்சிகளை நகர்த்தி கவனம் ஈர்க்கிறார், இயக்குனர் மனோஜ் கார்த்தி.

திரள் - மாயத்தோற்றம்.

Tags:    

மேலும் செய்திகள்