அதர்வாவுக்கு வெற்றியை கொடுத்ததா ''தணல்''?- சினிமா விமர்சனம்
பரபரப்பின் உச்சமாக படத்தை இயக்கி கவனிக்க வைத்துள்ளார், ரவீந்திர மாதவா.;
சென்னை,
''டிஎன்ஏ'' படத்தின் வெற்றிக்கு பிறகு அதர்வா நடித்து வெளியாகி இருக்கும் படம் ''தணல்''. இப்படம் எப்படி இருக்கிறது, அதர்வாவுக்கு அடுத்த வெற்றியை கொடுத்ததா என்பதை இப்போது காண்போம்.
புதிதாக போலீஸ் பணிக்கு சேர்ந்த அதர்வா உள்பட 6 பேர், உயர் அதிகாரியின் கட்டளையை ஏற்று 'ரவுண்ட்ஸ்' செல்கிறார்கள். அப்போது, பாதாள சாக்கடை மூடியை திறந்துகொண்டு 'ஹெல்மெட்' போட்ட ஆசாமி ஒருவர் வெளியே வந்து ஓடுவதை பார்க்கிறார்கள்.
அவனது நடவடிக்கையில் சந்தேக பொறிதட்ட, போலீசார் அவனை பின்தொடருகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அவன் காணாமல் போய்விட, போலீசார் திகைத்து போகிறார்கள்.
அப்போது அடியாட்களுடன் வரும் அஷ்வின் காக்குமனு, போலீசாரில் ஒருவரை வெட்டி சாய்க்கிறார். மற்றவர்களையும் தீர்த்துகட்ட துரத்துகிறார்.
அஷ்வின் யார்? போலீசாரை அவர் கொலை செய்ய துடிப்பது ஏன்? சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளான அதர்வா அதை தடுக்க முடிந்ததா? இதன் பின்னணி தான் என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
போலீஸ் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார், அதர்வா. அழுத்தமான அவரது கதாபாத்திரம் படத்தை தாங்கி பிடித்துள்ளது. காதல் காட்சிகளிலும் வஞ்சகம் இல்லாமல் நடித்திருக்கிறார்.
வில்லன் என்று சொல்வதை விட, படத்தின் இன்னொரு ஹீரோ என்று அஷ்வின் காக்குமனுவை சொல்லலாம். காண்போரை பீதி ஏற்படுத்தும் அளவுக்கு நடிப்பில் மிரட்டியுள்ளார். இனி வில்லனாக பல படங்களில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
லாவண்யா திரிபாதி வரும் காட்சிகளில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். ஷாராவின் காமெடி ரசிக்க வைக்கிறார். ஷாரா, சர்வா, லட்சுமி பிரியா உள்ளிட்டோரும் குறைவில்லாமல் நடித்து கொடுத்துள்ளனர்.
சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் காட்சிகளில் விறுவிறுப்பு. ஜஸ்டின் பிரபாகர் இசை குளிர்கால வெதுவெதுப்பு.
முதல் பாதியில் எழும் கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை சொல்லும் பாணி படத்தின் பலம். லாஜிக் மீறல்கள் பலவீனம். சிலரது தவறுக்காக ஒட்டுமொத்த போலீசாரையும் அழிக்க நினைப்பது நியாயமா? சமீபகாலமாக காவல்துறை மீது கலைத்துறைக்கு என்னதான் கோபமோ?
பரபரப்பின் உச்சமாக படத்தை இயக்கி கவனிக்க வைத்துள்ளார், ரவீந்திர மாதவா. சுரங்கப்பாதைக்குள் நடக்கும் சண்டை காட்சிகள் 'திக்... திக்... திக்...' ரகம். ''தணல்'' அதர்வாவின் அடுத்த வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தணல் - தகிப்பு