கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை தொடக்கம்.. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் மொத்தம் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.;
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 65 நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இதனால் கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நகராட்சி, போலீசார், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறைகள் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இந்தநிலையில் நேற்று மாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் திரிவேணி சங்கமம், கடற்கரை சாலை, காட்சி கோபுரம், ஜீரோ பாயிண்ட், கார் பார்க்கிங், ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய பகுதிகளை பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரியில் சபரிமலை சீசனை முன்னிட்டு மொத்தம் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தினமும் 150 பேர் வீதம் மூன்று சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி தெரிந்த போலீசார்களும் நியமிக்கப்படுகிறார்கள்.திரிவேணி, கடற்கரை சாலை, சீரோ பாயிண்ட் உள்ளிட்ட 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. நகரம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பராமரிக்கப்பட்டுள்ளன. மேலும் 10 புதிய கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருள் சேகர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.