ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த்திருவிழா.. சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 26-4-2025 அன்று நடைபெறுகிறது.;

Update:2025-04-20 17:52 IST

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் கொடியேற்றத்தைத் தொடர்ந்து நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

மாலையில் நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவில் சந்தனு மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை கண்ணாடி அறையை சென்றடைந்தார். நேற்று மாலையில் கற்பக விருட்ச வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் மூன்றாம் நாளான இன்று காலையில் சிம்ம வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் கம்பீரமாக எழுந்தருளிய நம்பெருமாள், சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவானை தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்