அன்பை வெளிப்படுத்திய இயேசுவின் கண்ணீர்

பெத்தானியாவில் லாசரு மரித்தபொது, இயேசு கண்ணீர் விட்டது மட்டுமல்லாமல் லாசருவை உயிரோடு எழுப்பியதாக பைபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-08 17:18 IST

கிறிஸ்தவர்களின் புனித நூலான பரிசுத்த வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து மூன்று இடங்களில் கண்ணீர் சிந்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யோவான் 11:35-ல் 'இயேசு கண்ணீர் விட்டார்' என கூறப்படுகிறது. பெத்தானியா என்கிற கிராமத்தில் லாசரு என்பவர் வியாதிப்பட்டு மரணத் தருவாயில் இருந்ததாக ஒரு சம்பவம் கூறப்பட்டுள்ளது. லாசருவின் குடும்பத்தை இயேசு அதிகம் சிநேகித்தார். லாசரு வியாதியாய் இருக்கும்போதே அவனின் சகோதரிகளான மார்த்தாள், மரியாள் இயேசுவுக்கு, 'நீர் சிநேக்கிறவர் வியாதியாய் இருக்கிறார்' என்று தகவல் கொடுத்தார்கள். இயேசு வந்தால் சகோதரன் விடுதலை பெற்றுக்கொள்வான் என்று எதிர்பார்த்த சகோதரிகளுக்கு ஏமாற்றம். லாசரு மரித்த பின்பும் இயேசு வரவில்லை.

ஆனால் யோவான் 11:4-ல் இயேசு அதைக் கேட்டபோது இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாய் இராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாய் இருக்கிறது என்றார். இயேசு மார்த்தாளிடத்திலும், அவளுடைய சகோதரியிடத்திலும், லாசருவிடத்திலும் அன்பாயிருந்தார் (யோவான் 11:5). இவ்வளவாக அன்புகூர்ந்த இயேசு லாசருவை பார்க்க வராத காரணத்தால் சகோதரிகள் சோர்ந்து போயிருந்தார்கள்.

'இயேசு வருகிறார்' என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது அவருக்கு எதிர்கொண்டு போனாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து ஆண்டவரே நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் (யோவான் 11:20,21). துக்கத்தினால் மார்த்தாள், மரியாள் அழுகிறதையும், அவளோட கூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கி துயரமடைந்து கண்ணீர் விட்டார்.

இயேசு கண்ணீர் விட்டது மட்டுமல்ல, மரித்து போய் நான்கு நாள் கல்லறையில் இருந்த லாசருவை உயிரோடு எழுப்பினார். இயேசு லாசருவின் குடும்பத்தின் மேல் எவ்வளவு அன்பு கூர்ந்தார் என்பதை செயலிலும் வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் அன்பு லாசருவின் குடும்பத்தின் கண்ணீரை துடைத்தது.

இரண்டாவதாக கெத்செமனேயில் இயேசு கண்ணீர் விட்டார். மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் விடுதலைக்காக இயேசு கண்ணீர் விட்டார். இயேசு ஜெபிக்கும்போது சீடர்களுக்காக ஜெபித்தார். இயேசு சீடர்களிடம் அன்பாய் இருந்தார். நான் உங்களில் அன்பாய் இருந்தது போல நீங்களும் ஒருவருள் ஒருவர் அன்பாய் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கற்பனையாய் இருக்கிறது. ஒருவன் சிநேகிதனுக்காக தன் ஜீவனை கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை (யோவான் 15:12,13 என்று கூறினார்.

'நான் உங்களை சிநேகிதர் என்றேன்' (யோவான் 15:15) எனக் கூறுகிறார். அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்த படியால், நாமும் அவரிடத்தில் அன்பு கூருகிறோம் (யோவான் 4:19). யூதாஸ் தன்னை காட்டிக் கொடுப்பான் என்று இயேசுவுக்கு தெரியும். ஆனாலும் அவர்களை தெரிந்துகொண்டு 'நண்பனே', 'சிநேகிதனே' என்று அழைத்தார். அவர்களுக்காக ஜெபித்தார்.

மூன்றாவது எருசலேமில் அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காக கண்ணீர் விட்டு அழுது, உனக்கு கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கேற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாய் இருக்கும், இப்பொழுதோ அவை உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது (லூக்கா 19:41,42) என எலுசலேம் தேசத்தின் விடுதலைக்காக கண்ணீர் விட்டு அழுதார்.

இப்படியாக இயேசு கிறிஸ்து, லாசருவின் குடும்பத்துக்காகவும், சீடர்களுக்காகவும், எருசலேமுக்காகவும் கண்ணீர் விட்டு தம் அன்பை வெளிப்படுத்தினார்.

நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களை காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார். உன் கிரியைக்கு பலன் உண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே 31:16). தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் (வெளிப்படுத்துதல் 7:17) என கூறப்படுகிறது. சங்கீதக்காரன் சொல்லும்போக என் கண்ணீரை துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது என்கிறார்.

நம் ஆத்துமாவை மரணத்துக்கும், நம் கண்ணை கண்ணீருக்கும், நம் காலை இடறுதலுக்கும் தப்புவிக்கிறவர். ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரை துடைக்கிறவர். தேவன் எல்லா முகங்களிலுமிருந்தும் கண்ணீரை துடைப்பார். எசேக்கியாவிடம் கூறும்போது, உன் விண்ணப்பத்தை கேட்டேன்; உன் கண்ணீரை கண்டேன் என கூறுகிறார்.

இயேசு கண்ணீரை துடைப்பவர் என்பதால் அவர் கரங்களில் நம்மை ஒப்புக்கொடுப்போம். நான் படுகிற வேதனை யாருக்கும் தெரியாது. நான் வடிக்கிற கண்ணீர் யாருக்கும் தெரியாது. என் கஷ்டத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கலாம். நேசிக்கவும், விசாரிக்கவும், கண்ணீரைத் துடைக்கவும், உதவி செய்யவும் இயேசு இருக்கிறார். அகலமும், நீளமும், உயரமும் அளக்க முடியாத இயேசுவின் அன்பு நம்மை ஆளுகை செய்யட்டும். ஆமென்.

-கவிதா டதி, ரீத்தாபுரம், கன்னியாகுமரி மாவட்டம்.

Tags:    

மேலும் செய்திகள்