கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா: இன்று மாலை கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் விழா

விரதம் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.;

Update:2025-05-28 10:51 IST

கரூர் மாநகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு திருவிழா காலங்களில் பக்தர்கள் படையெடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதன் பின்னர் பக்தர்கள் பால்குடம் மற்றும் புனிதநீர் எடுத்து வந்து கம்பத்தில் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.

கடந்த 16-ந்தேதி பூச்சொரிதல் விழாவையொட்டி, கரூர் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் மாவிளக்கு போட்டும், பால்குடம் எடுத்தும், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

நேர்த்திக்கடன்

திருவிழா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து நேற்று காலை முதலே கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் ஜவகர்பஜார் வீதியில் மக்கள் அலைகடலென திரண்டிருந்ததை காண முடிந்தது. மேலும் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் இருந்து புனித நீராடி பக்தர்கள் நீண்ட அலகினை தங்களது கன்னத்தில் குத்திக்கொண்டு பக்தி பரவசத்துடன் கோவிலுக்கு வந்தனர்.

மேலும் சிலர் தங்களது முதுகில் வாள்களை குத்திக்கொண்டும், கன்னத்தில் அலகு குத்திக்கொண்டும் வந்தனர். அப்போது அவர்களை வரவேற்கும் விதமாக மேளதாளங்கள் முழங்கப்பட்டன. மேலும் பக்தர்கள் தங்களது முதுகில் கொக்கிகளை மாட்டிக்கொண்டு பறவைக்காவடியில் அந்தரத்தில் தொங்கியவாறு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையொட்டி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் விழா

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் விழா இன்று (புதன்கிழமை) மாலை 5.15 மணிக்கு நடக்கிறது. பின்னர் இரவு 7.30 மணியளவில் ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்