கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்

‘ஓம் நமசிவாய’ என முழக்கமிட்டபடி பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.;

Update:2025-07-08 12:16 IST

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ராமாயண வரலாற்று சிறப்பும் இலக்கிய சான்றும் பெற்ற கண்டதேவி கிராமத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரியநாயகி திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆனி மாதம் தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறும். உஞ்சனை, தென்னிலை, செம்பொன்மாரி, இரவுசேரி நான்கு நாட்டார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இத்தேரோட்டத் திருவிழாவை விமரிசையாக கொண்டாடுவார்கள். கடந்த ஆண்டு தேர் புதுப்பிக்கப்பட்டு வெள்ளோட்டமும் தேரோட்டமும் நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான தேரோட்டத் திருவிழாவிற்கு கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடைபெற்று, ஒவ்வொரு நாளும் சுவாமி நான்கு ரத வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்கள் அலங்கரிக்கும் பணி மற்றும் ஹைட்ராலிக் பிரேக் அமைத்து பரிசோதனை செய்யும் பணியும் நடைபெற்றது.

இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணி அளவில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். காலை 6.00 மணியளவில் உஞ்சனை, தென்னிலை, இரவு சேரி, செம்பொன்மாரி நான்கு நாட்டார்களும், அனைத்து சமுதாய கிராம பொதுமக்களும் தேர்வலத்தில் நின்றனர்.

அதனைத் தொடர்ந்து தேரில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, 6.10 மணியளவில் தேர் புறப்பட்டது. 'ஓம் நமசிவாய' என விண்ணை தொடும் அளவிற்கு பக்தர்கள் முழக்கமிட்டபடி தேர் இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலை அடைந்தது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்