திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: கிரிவலப்பாதையில் 1,060 கண்காணிப்பு கேமராக்கள்
திருவண்ணாமலையில் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக, நாளை (3.12.2025) மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த ஆண்டு தீபத்தை காண 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் உணவு விடுதிகள், ஓட்டல்கள், சத்திரங்களில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்றும், சுகாதாரமாக உள்ளதா என்றும் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். செயின் பறிப்பு, திருட்டை தடுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 1,060 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 61 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மகா தீபம் நாளை மாலை 6 மணிக்கு ஏற்றப்படுவதையொட்டி வெளிநாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்து குவிய தொடங்கி விட்டார்கள். திருவண்ணாமலை நகரம் மற்றும் மாடவீதிகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.