முருகன் கோவில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம்

கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2025-12-04 10:40 IST

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. தங்க கிரீடம் தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 9 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பின்னர் மாலை 6 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், வெள்ளி மயில் வாகனத்தில் ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ரத வீதியில் சொக்கப்பனையில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் கோவில் எதிரே உள்ள பச்சரிசி மலையில் பெரிய அகல் விளக்கில் 350 கிலோ நெய் நிரப்பி, பிரமாண்டமான திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது மலைக்கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கடைகளில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

2 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதால் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் 5 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குன்றத்தூரில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. நேற்று மாலை கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 12 அடி உயரமுள்ள தூணின் மீது அகண்ட தீபம் ஏற்றுவதற்காக பெரிய அளவிலான இரும்பு அகல், நெய் ஊற்றி திரியுடன் வைக்கப்பட்டது.

பின்னர் மேள, தாளங்கள முழங்க கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபமானது எடுத்து வரப்பட்டு கொட்டும் மழையில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. கோவில் வளாகத்தின் கீழ் பகுதியில் சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. கார்த்தியை தீபம் ஏற்றும்போது மழை பொழிந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் குடை பிடித்தபடியும், கொட்டும் மழையில் நனைந்தபடியும் சாமி தரிசனம் செய்தனர்.

இதைபோல வல்லக்கோட்டை முருகன் கோவில், திருப்போரூர் முருகன் கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டப்பட்டது. விளக்கு ஏற்றியும் சொக்கப்பனை கொளுத்தியும் வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்