இன்று திருக்கார்த்திகை: நெல்லையில் அகல் விளக்குகள் விற்பனை அமோகம்

மண் மற்றும் நீரால் உருவாகும் அகல் விளக்குகள் காற்றினால் காய்ந்து தீயினால் மெருகேறி ஒளிதருவதால் பஞ்சபூதங்களையும் ஒரே நேரத்தில் போற்றுவதாக நம்பப்படுகிறது.;

Update:2025-12-03 10:39 IST

காா்த்திகை மாதம் தொடங்கிய நாளில் இருந்து தினமும் வீடுகளிலும், கோவில்களிலும் அகல் விளக்கு ஏற்றி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய பண்டிகையான திருக்காா்த்திகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகைக்காக நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் குறிச்சி, தென்காசி, காருக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. திருக்கார்த்திகை தினத்தையொட்டி தற்போது அகல் விளக்குகள் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து குறிச்சியைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளா்கள் கூறுகையில், ‘‘குறிச்சி மண்பாண்ட கூட்டுறவுச் சங்கம் 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 150-க்கும் மேற்பட்டோா் இச்சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ளனா். மண்பானை, மண்சட்டிகள், டம்ளா்கள், பூந்தொட்டிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்திற்காக அகல் விளக்குகள் ஜூலை முதல் நவம்பா் வரை தயாரிக்கப்படும். கன்னியாகுமரி, விருதுநகா், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் வியாபாரிகள் இங்கு வந்து மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். இந்த ஆண்டு பெய்த தொடா் மழையால் கடைசிகட்ட அகல்விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

7 வித அளவுகளில் அகல்விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. 10 மி.லி, 25 மி.லி., 50 மி.லி., 100 மி.லி., 250 மி.லி. உள்பட அதிகபட்சமாக 1 லிட்டா் எண்ணெய் ஊற்றும் வகையில் அகல்விளக்குகள் உள்ளன. இவை வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்கும்போது ரூ.2 முதல் ரூ.50 வரை விலை நிா்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சுமாா் 2 அடி உயரத்தில் திருவிளக்குகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அவை வேலைப்பாடுக்கு ஏற்ப ரூ.150 முதல் விற்பனையாகி வருகின்றன.

பரிகாரம் நிறைவேற அகல் விளக்குகளில் தீபமேற்றுவதே சிறந்ததாகும். மண் மற்றும் நீரால் உருவாகும் அகல் விளக்குகள் காற்றினால் காய்ந்து தீயினால் மெருகேறி ஒளிதருவதால் பஞ்சபூதங்களையும் ஒரே நேரத்தில் போற்றுவதாக நம்பப்படுகிறது. இப்பண்டிகையில் நம் பாரம்பரியத்திற்கு மாறாக அகல்விளக்குகளில் தீபம் ஏற்றாமல் மெழுகுவா்த்தி, சீன களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளில் விளக்கேற்றுவது அதிகரித்துள்ளது. மக்கள் மண்பாண்ட தொழிலாளா்களைக் காக்கும் வகையில் அகல் விளக்குகளை அதிகம் வாங்கி பயன்படுத்த வேண்டும்’’ என்றனா்.

நெல்லை மாநகர பகுதியான நெல்லை டவுன், சந்திப்பு, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் பகுதியில் திருக்கார்த்திகையொட்டி அகல்விளக்கு விற்பனை மும்மரமாக நடந்து வருகிறது. மேலும் மெழுகுவர்த்தியும் விற்பனை செய்து வருகின்றனர்.

திருக்கார்த்திகையன்று விளக்கேற்றி பூஜை செய்வதற்கு தேவையான அவல், பொரி, தேங்காய், பழம் அதிகளவில் விற்பனையானது. நெல்லை டவுன் மார்க்கெட்டில் கற்பூரவள்ளி, ரசகதலி, நாட்டு வாழைப்பழம் உள்ளிட்ட வாழைத்தார்கள் விற்பனை மும்மரமாக நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்