இன்று கார்த்திகை தீபத்திருநாள்: வீடுகளில் தீபம் ஏற்ற நல்ல நேரம்
வீட்டின் வாசற்படிகள், சமையலறை, மொட்டை மாடி, பால்கனி, மாடி படிக்கட்டு, கழிவறை, கிணறு என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றலாம்.;
கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கோவில்களில் இன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதேபோல் வீடுகள்தோறும் இன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவார்கள். இவ்வாறு வீடுகளில் தீபமேற்ற உகந்த நேரம் என்ன என்பதை பார்ப்போம்.
திருக்கார்த்திகை தினமான இன்று கிருத்திகை நட்சத்திரம் மாலை 4.48 மணி முதல் நாளை (4.12.2025) மாலை 3.08 மணி வரை இருக்கிறது. பெளர்ணமி திதி நாளை (4.12.2025) காலை 7.55 மணிக்கு தொடங்குகிறது. தீபம் ஏற்றும் போது கார்த்திகை நட்சத்திரம் இருக்க வேண்டும் என்பதால் இன்று மாலை 6 மணிக்கு மேல் தீபம் ஏற்றலாம்.
வீடுகளில் மொத்தமாக 27 தீபங்களை ஏற்றலாம். 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் இந்த எண்ணிக்கையில் விளக்குகள் ஏற்றுவது சரியான முறை. இந்த 27 என்பது அகல்களை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். அதற்கு மேல் விருப்பம் போல் அதிக விளக்குகளை ஏற்றலாம். ஆனால் குறைந்தபட்சம் 9 விளக்குகளாவது ஏற்றுவது நல்லது. வாசற்படிகள், சமையலறை, மொட்டை மாடி, பால்கனி, மாடி படிக்கட்டு, கழிவறை, கிணறு, குப்பைகள் குவிக்கப்படும் இடம் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றலாம்.
மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டும் என்பதால் அகல்களில் முன்கூட்டியே எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு எங்கெல்லாம் வைக்க வேண்டுமோ அங்கெல்லாம் வைத்துவிட்டு தயாராக இருக்க வேண்டும். பின்னர் அண்ணாமலையார் கோவிலில் தீபம் ஏற்றியதும், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என சொல்லிவிட்டு வீடுகளில் விளக்கு ஏற்றலாம்.
முதலில் வாசலில் தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் அங்கிருந்து பூஜை அறைக்கு தீபத்தை கொண்டு வரவேண்டும். பிறகு வீடு முழுக்க ஏற்றவேண்டும்.