திருவண்ணாமலை தீபத்திருவிழா... அமைதி, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 108 சாதுக்கள் பாதயாத்திரை
சாதுக்களின் பாதயாத்திரை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் தொடங்கி கிரிவலப்பகுதியில் உள்ள ஈசானிய லிங்கம் வரை நடைபெற்றது.;
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் இன்று (புதன் கிழமை) மாலை, கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.
தீபத்திருவிழாவில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நேற்று 108 சாதுக்கள் கிரிவலப்பாதையில் பாதயாத்திரை சென்றனர். மேலும் பரணி தீபம் மற்றும் மகாதீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற பிரார்த்தனை செய்தும் யாத்திரை சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள் தலைமை தாங்கினார். இதில் 108 சிவ பக்தர்கள், சாதுக்கள், சன்னியாசிகள் கலந்து கொண்டனர்.
இந்த பாதயாத்திரை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் தொடங்கி கிரிவலப்பகுதியில் உள்ள ஈசானிய லிங்கம் வரை நடைபெற்றது. அவர்கள் மேளதாளம் முழங்க ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் காமராஜர் சிலை, ரமணாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கங்கள் வழியாக சென்றனர்.
நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் ஆத்ம சித்தர் லட்சுமி அம்மாள், அகண்ட ஹிந்து ராஷ்டிரா திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.