10 வருடங்களுக்கு ஒரு முறை... மகிஷாசுர சம்ஹாரம்.. பல்லகச்சேரி கிராமத்தில் களைகட்டிய திருவிழா
பல்லகச்சேரி செல்லியம்மன் சாமுண்டி அம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.;
தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் மற்றும் சாமுண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர்த் திருவிழாவும், 10 ஆண்டுக்கு ஒரு முறை மகிஷாசுர சம்ஹாரமும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டின் திருவிழா கடந்த 8-ந் தேதி பூ போடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான மகிஷாசுர சம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு 16 வகையான திரவியப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது.
அதன்பின் மகிஷாசுர சம்ஹார நிகழ்ச்சி தொடங்கியது. மகிஷாசுரன் முகம் கொண்ட பிரமாண்ட சிற்பம், முக்கிய வீதிகள் வழியாக பெரிய ஏரிக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அங்கு எழுந்தருளிய அம்மன், அசுரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. சூளாங்குறிச்சி, வேளானந்தல், கலையநல்லூர் உள்ளிட்ட 14 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகிஷாசுர சம்ஹார நிகழ்வை கண்டுகளித்து, அம்மனை வழிபட்டனர்.