தெய்வப்பிறவி தரிகொண்ட வெங்கமாம்பா

வெங்கமாம்பாவின் பிறந்த நாள் மற்றும் ஜீவ சமாதி அடைந்த தினத்தன்னு சிறப்பு வழிபாடுகள் மற்றும் கீர்த்தனைகள் நடைபெறுகின்றன.;

Update:2025-08-19 14:43 IST

தமிழ்நாட்டில் திருவில்லிபுத்தூரில் ஆண்டாள், இறைவன் ரெங்கமன்னாரைத் தன் கணவராகப் பாவித்தார். கடைசியில் ரெங்கமன்னாரும் ஆண்டாளை ஏற்றுக் கொண்டார். அதுபோல திருப்பதி ஏழுமலையானின் பரிபூரண அருளைப் பெற்று அற்புதங்கள் நிகழ்த்தி, திருமலையிலேயே ஜீவசமாதி அடைந்தவர் மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், தரிகொண்ட என்ற கிராமத்தில், கிருஷ்ணய்யா - மங்கமாம்பா என்ற அந்தண குல தம்பதியினருக்கு 1730-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி பிறந்தார் வெங்கமாம்பா. சிறு வயதிலிருந்தே வெங்கமாம்பா, திருமலை வெங்கடாசலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார்.

பெற்றோரின் வற்புறுத்தலின்பேரில், வெங்கமாம்பா சிறு வயதிலேயே வெங்கடாசலபதி என்பவரை மணந்து கொண்டார். இல்லற வாழ்வில் நாட்டமில்லாத வெங்கமாம்பா, தன் கணவருக்கு தான் ஒரு தெய்வீகப் பெண் என்பதை உணர்த்தினார்.

சிறு வயதிலேயே கணவரை இழந்த வெங்கமாம்பா, விதவைக் கோலம் பூணாமல், தன் கணவர் திருமலை வேங்கடவன் என்று கூறி, நித்ய சுமங்கலியாக வாழ ஆரம்பித்தார். ஊரில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தரிகொண்டாவில் அவர் வழக்கமாக வழிபடும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் செல்லவும் தடை ஏற்பட்டது. அந்தக் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதியின் பின்புறம் மறைந்து வாழ ஆரம்பித்தார், வெங்கமாம்பா.

ஒரு சமயம் புஷ்பகிரி என்ற ஊரிலிருந்து தரிகொண்டா கிராமத்திற்கு ஒரு சுவாமி வந்திருந்தார். அவரிடம் ஊர் மக்கள், வெங்கமாம்பா விதவைக் கோலம் ஏற்காமல் இருப்பதைக் கூறினார்கள். சுவாமிகள் வெங்கமாம்பாவைத் தன்னை வந்து சந்திக்கும்படி தகவல் அனுப்பினார். அதன்படி வெங்கமாம்பா வந்ததும், அவரது சுமங்கலிக் கோலத்தை ஏற்காத சுவாமிகள், ஒரு திரையைக் கட்டி, திரைக்குப் பின்புறம் அவர் அமர்ந்திருந்து, வெங்கமாம்பாவிடம் ஓரிரு கேள்விகள் கேட்டார். அதற்கு பதிலளிக்கும் முன்பு, தன் கேள்விகளுக்குப் பதில் தருமாறு வெங்கமாம்பா சுவாமிகளிடம் கேட்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த சுவாமிகள், ‘ஒரு சந்நியாசியைப் பார்த்தால் உடனே வணங்க வேண்டும் என்ற பண்புகூட உன்னிடம் இல்லையே’ என்றார். இதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த வெங்கமாம்பா, சுவாமிகளை சற்று நேரம் தன் பக்கம் வருமாறு கூற, அவரும் வந்தார். உடனே அவர் உட்கார்ந்திருந்த இடம் மற்றும் சில பகுதிகளில் மளமளவென தீ பரவ ஆரம்பித்தது. இதையடுத்து வெங்கமாம்பாவின் சக்தியை உணர்ந்தார் சுவாமிகள்.

சில காலம் கழித்து வெங்கமாம்பா, தான் இருக்க வேண்டிய இடம் திருமலைதான் என்று முடிவுசெய்து, திருமலைக்கு வந்து சேர்ந்தார். தங்குவதற்கு இடம் இல்லாமலும், உண்ண உணவின்றியும் பல நாட்கள் கஷ்டப்பட்டார். தன் பக்தர் ஒருவரின் கனவில் வந்த வேங்கடவன், வெங்கமாம்பா தங்குவதற்கு ஒரு ஆசிரமமும், தினமும் அவருக்கு நைவேத்தியப் பிரசாதமும் கிடைக்கும்படிச் செய்தார்.

தினமும் இரவில் வேங்கடவன் சன்னிதியில் ஏகாந்த சேவை முடிந்து நடை சாற்றப்பட்டபிறகும், கோவில் முன்பு நின்றபடி பாடல்களை பாடி வழிபடும் வழக்கத்தை கொண்டிருந்தார் வெங்கமாம்பா. அவரின் தூய்மையான பக்தியால் ஈர்க்கப்பட்ட வேங்கடவன், கருவறைக்குள் வர அனுமதித்ததுடன், அவருடைய கவிதைகளையும் பாடல்களையும் கேட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு தினமும் இரவு பாமாலை சூடியும், தட்டில் முத்துக்களை வைத்து ஆரத்தி எடுத்தும் ஏகாந்த சேவை செய்து வழிபட்டுள்ளார் வெங்கமாம்பா.

ஒரு நாள். அதிகாலையில் நடை திறந்து கருவறைக்குள் சென்ற அர்ச்சகர்கள், முத்துக்கள் சிதறி கிடப்பதை கவனித்தனர். ‘இது வெங்கமாம்பாவின் வேலைதான்’ என்று அவர் மீது கடும் கோபம் கொண்டனர். இதற்கு தண்டனையாக அவரை திருமலையிலிருந்து 15 மைல் தொலைவில் உள்ள தும்புரகோணத்தில் உள்ள ஒரு குகையில் கொண்டு போய் விட்டார்கள்.

ஆனால் வெங்கமாம்பா, அங்கிருந்து கர்ப்பக்கிரகம் வரை சுரங்கப்பாதை அமைத்து, தான் செய்து வந்த சேவையைத் தொடர்ந்து ஆறு ஆண்டு காலம் செய்து வந்தார். இதன்பிறகு, வெங்கமாம்பாவின் மகிமையை பகவான் மக்களுக்கு உணர்த்தினார். அவருடைய ஏகாந்த சேவையை, தான் பூரணமாக ஏற்றுக் கொள்வதாகவும் தெரியப்படுத்தினார். அதனால் அவர் 'துறவி வெங்கமாம்பா' என்று அழைக்கப்பட்டார்.

வெங்கமாம்பாவின் பக்தியையும் அர்ப்பணிப்பையும் உணர்ந்த அர்ச்சகர்கள், அவரை குகையில் இருந்து திரும்பி வரும்படி கேட்டுக்கொண்டனர். திரும்பியதும் ஏகாந்த சேவையில் பங்கேற்கவும், ஆரத்தி எடுக்கவும் அனுமதி அளித்தனர்.

வெங்கமாம்பாவின் பக்தியை பகவான் ஏற்றுக்கொண்டதால், அவருடைய ஆரத்தி தினமும் இரவு பகவானுக்கு செய்யப்படும் ஏகாந்த சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது. வெங்கமாம்பாவின் வம்சாவளியினரால் ஏகாந்த சேவை இன்றளவும் நடத்தப்படுகிறது. தினமும் இரவு வெள்ளித் தட்டில் முத்துக்களைப் பரப்பி, தரிகொண்டவில் உள்ள லட்சுமி நரசிம்ம விக்ரகம் வைத்து, துறவி வெங்கமாம்பா இயற்றிய பாடலுடன் ஆரத்தி எடுக்கப்பட்டு, பிறகு நடை சாற்றப்படுகிறது. இதற்கு 'வெங்கமாம்பா முத்தியாலு ஆரத்தி' என்று பெயர்.

நிறைய கவிதைகளும், பாடல்களும் இயற்றிய மாத்ருஸ்ரீ வெங்கமாம்பா தனது 87-வது வயதில், 1817-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி ஜீவ சமாதி அடைந்தார். இவரது ஜீவசமாதி, திருமலையில் வராகசுவாமி கெஸ்ட் ஹவுஸ் பின்புறம் ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் அமைந்துள்ளது. தற்போது, இவரது பிருந்தாவனத்திற்கு பக்தர்கள் அதிகமாக வருவதால், பள்ளிக்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வெங்கமாம்பாவின் பிறந்த நாள் மற்றும் ஜீவ சமாதி அடைந்த தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் கீர்த்தனைகள் நடைபெறுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்