வானமாமலை பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா
தெப்பத் திருவிழாவையொட்டி வானமாமலை பெருமாளுக்கும் ஸ்ரீவரமங்கை தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.;
நெல்லை மாவட்டம், நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், 8 சுயம்பு ஷேத்திரங்களில் முதன்மையானதும் ஆகும். பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்பத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தெப்பத் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி வானமாமலை பெருமாளுக்கும் ஸ்ரீவரமங்கை தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீர்த்த, ஜடாரி, பிரசாத விநியோகம் நடந்தது. அதன் பின் இரவில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கை தாயார் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவத்திற்கு புறப்பட்டனர்.
தெப்பக்குளத்தை அடைந்ததும், வானமாமலை ஜீயர் முன்னிலையில், வானமாமலை பெருமாள் ஸ்ரீவரமங்கை தாயார் விஷேச அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 12 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவை முன்னிட்டு தெப்பம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.