ஆற்றுத் திருவிழா கோலாகலம்.. கோவில்களின் உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில் சங்கமம்
கடலூர் தென்பெண்ணையாற்றின் கரையில் குவிந்திருந்த பொதுமக்கள்
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் குவிந்திருந்த பொதுமக்கள்
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் ஆறுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவின்போது, சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சாமி சிலைகள் ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெறும்.
விழுப்புரம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் நிறைவுப் பகுதியாக, தை மாதத்தின் ஐந்தாம் நாளில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது. அவ்வகையில் இன்று ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, பம்பை ஆறு மற்றும் வராக நதி ஆகிய ஐந்து ஆறுகள் பாயும் பகுதிகளில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்வேறு கோவில்களில் உள்ள உற்சவர்கள் மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் ஊர்வலமாக ஆற்றுக்கு அழைத்து வரப்பட்டனர். ஆற்று நீரில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆற்றங்கரையில் வரிசையாக எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளை ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர்.
கடலூர்
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தென்பெண்ணையாற்றின் கரையோரம் ஆற்றுத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அதிகாலையில் இருந்தே அருகில் உள்ள கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, தென் பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடந்தது. ஆற்றுத்திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தென்பெண்ணையாற்றின் கரையோரம் குவிந்தனர்.
இதுதவிர ஆற்றுத்திருவிழாவில் மட்டுமே அதிகளவில் கிடைக்கும் சிறு வள்ளி கிழங்குகள் மற்றும் முறம் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. இதை ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். இது தவிர பழங்கள், இனிப்புகள், கரும்பு சாறு விற்பனையும் சூடுபிடித்தது. சிறுவர்கள் விளையாடி மகிழவும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.