திருச்செந்தூர் கோவிலும் மலைக்கோவில்தான்
திருச்செந்தூர் திருத்தலத்தில் சந்தன மலை இருந்ததற்கான அடையாளமாக வள்ளி குகை அருகே சந்தனமலை பாறைகளாக உள்ளன.;
முருகப்பெருமானின் அறுபடை வீடு தலங்களில் ஐந்து தலங்கள் மலையுடன் இணைந்திருக்க, திருச்செந்தூர் தலம் மட்டும் தரைப்பகுதியில் அமைந்திருப்பதாக நாம் கருதுகிறோம். ஆனால் இத்தலமும் மலையுடன் தொடர்புடைய தலம்தான். ஆம்.. சந்தன மலை குகைக்குள் இக்கோவில் அமைந்துள்ளதாக அறிய முடிகிறது.
மூலவரின் கருவறையும், பஞ்சலிங்க குகையும், உற்சவர் ஜெயந்திநாதர் இருக்கும் அறையும் அதனுள் அமைந்திருக்கும் கருவூல பாதுகாப்பு அறையும் பாறை சுவர்களைக் கொண்டுள்ளது. ஆலயத்தின் மேல்தளத்தில் நின்று பார்த்தால் சந்தன நிறத்தில் அமைந்த பாறைக் குன்றுகளில் திருக்கோவில் அமைந்திருப்பதைக் காணலாம்.
கோவில் பிரகாரத்தில் 'திருமுருகனுக்கு பள்ளிகொண்ட பெருமாளாக வெங்கடாசலபதி ஆசி வழங்கும் சன்னதி பாறை குகைக்குள்ளே அமைந்திருப்பதைக் காணலாம். திருச்செந்தூரும் குடைவரை கோவில் என்பதற்கு சான்றாக, இந்த சந்நிதி குடைவரை சன்னதியாக உள்ளது. வெளிப்பக்கமுள்ள சந்தன மலைப் பாறையினை பக்தர்கள் தொட்டு வணங்கி வருவதை இன்றும் பார்க்க முடிகிறது.
சந்தன நிறத்தில் இப்பாறைகள் அமைந்திருப்பதால், "சந்தன மலை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். இத்திருக்கோவிலுக்கு வெளியில் அமைந்திருக்கும் வள்ளி குகை மற்றும் மணல் குன்றுகள் முதலியன கடற்கரையில் அமைந்திருக்கும் சிறுமலைக்கு ஆதாரமாக விளங்குகின்றன.
இதுதவிர மற்றொரு சிறப்பும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உண்டு. அறுபடை வீடுகளின் மற்ற தலங்கள் எல்லாம் மலைகளை மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் திருச்செந்தூரில் மட்டும்தான் மலையுடன் கடலும் சேர்ந்து உள்ளது.