திருவள்ளூர்.. காக்களூர் ஏரியில் விநாயகர் சிலைகளை கரைத்த மக்கள்

திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் காக்களூர் ஏரியில் சிலைகளை கரைத்தனர்.;

Update:2025-08-28 12:06 IST

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. அப்போது கோவில்கள், வீடுகளில் பொதுமக்கள் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

இந்நிலையில், திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் விநாயகர் சதுர்த்தி பூஜை முடிவடைந்ததும், வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை நேற்று காக்களூர் ஏரியில் கரைத்தனர்.

நாளை விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட 19 நீர் நிலைகளில் கரைக்க உள்ளனர்.

இதில் திருவள்ளூர், புல்லரம்பாக்கம், ஈக்காடு, மணவாளநகர், காக்களூர், பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, புதுமாவிலங்கை, கடம்பத்தூர், மப்பேடு, கீழச்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் கோவில்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை டிராக்டர்களில் வைத்து மேளதாளம் முழங்க இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்று கூடி திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் இருந்து காக்களூர் ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க உள்ளனர்.

இதேபோல் திருத்தணியில், பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, ஆர்.கே. பேட்டை, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் போன்ற பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்