திருச்செங்கோடு வைகாசி விசாக தேர் திருவிழா: அம்மன் தேரோட்டம்
வைகாசி விசாகத் திருவிழாவின் முதல் நிகழ்வாக, பத்ரகாளியம்மன் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த் திருவிழா வரும் 01.06.2025 அன்று கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. திருச்செங்கோடு மலை கோவிலில் எழுந்தருளியிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் திருநகருக்கு எழுந்தருளி தேரில் பவனி வருவார்.
இந்த திருவிழாவின் முதல் நிகழ்வாக அஷ்டதிக்கு பாலகர்கள், நான்கு ரத வீதிகளில் உள்ள காவல் தெய்வங்களுக்கு இறைவனின் ரதவீதி உலாவை எடுத்து கூறவும், ரத பவனி தடையின்றி நடைபெறவும் பத்ரகாளியம்மன் அம்மன் அமாவாசை திதி தினத்தன்று கிருத்திகை நட்சத்திர நாளில் புறப்பட்டு தேரில் ஏறி பவனிவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரம்பரியமாக அமாவாசை தின நடு இரவில் அம்மன் புறப்பாடு நடக்கும். அப்போது அனைத்து வீதி விளக்குகள், வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு இருக்கும். இதனால் இந்த தேரோட்டத்தை இருட்டுத் தேர் என பொதுமக்கள் அழைப்பார்கள். நாளடைவில் மருவி திருட்டுத் தேர் என அழைக்கப்பட்டது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் மட்டும் இந்த தேரை வடம் பிடித்து இழுப்பது வழக்கம். இருளில் இழுக்கப்பட்ட அம்மன் தேர், கடந்த சில வருடங்களாக அரசு உத்தரவால் மாலையில் வெளிச்சத்தில் இழுக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் நேற்று மாலை 5 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடிக்கப்பட்டது. நான்கு ரதவீதிகள் வழியாக வந்த தேர் மாலை 6.30 மணிக்கு நிலை சேர்ந்தது. முன்னதாக பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.