திருப்பதி பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் வாத்தியங்கள் முழங்க, பல்வேறு நடனக் குழுவினர் கலைநிகழ்ச்சி நடத்தினர்.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி ‘குருவாயூர் கிருஷ்ணர்’ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக வந்தன. மேள, தாளம் மற்றும் இறை இசை மங்கல வாத்தியங்களும், கேரள செண்டை மேளமும் இசைக்கப்பட்டன.
நடன குழுவினர் மகாவிஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார், நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடன் போன்ற சாமி வேடமிட்டு ஊர்வலமாகச் சென்றனர். கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் ஆடினர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி ‘வீணை ஏந்திய சரஸ்வதி’ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கேலரிகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் ‘ஏழுகொண்டலுவாடா.. வேங்கடரமணா, கோவிந்தா.. கோவிந்தா...’ என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
வாகன வீதிஉலாவில் திருமலை ஜீயர் சுவாமிகள், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா நடைபெற்றது. வாகன வீதிஉலாவுக்கு முன்னால் வாத்தியங்கள் முழங்க, பல்வேறு நடனக் குழுவினர் கலைநிகழ்ச்சி நடத்தினர். நடன குழுவினர் மகாவிஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார், நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடன் போன்ற சாமி வேடமிட்டு ஊர்வலமாகச் சென்றனர். கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் ஆடினர். இன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.