மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா... பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஒருபுறம் பக்தர்கள் மலையப்ப சுவாமியின் மோகினி அவதார தரிசனத்தில் மயங்கியதோடு, மறுபுறம் வண்ணமயமான நாட்டிய நிகழ்ச்சிகள் விழாக்கால சூழலை சிறப்பாக்கின.;
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை கற்பக விருட்ச வாகன வீதிஉலா நடைபெற்றது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் 5-வது நாளான இன்று காலை மோகினி அவதார உற்சவம் (பல்லக்கு உற்சவம்) நடைபெற்றது. அப்போது மலையப்பசுவாமி அழகிய மங்கை வேடமேற்று மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மனதை மயக்கிய மோகினி அவதார திருக்கோலத்தை மாட வீதிகளில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஒருபுறம் பக்தர்கள் மலையப்ப சுவாமியின் மோகினி அவதார தரிசனத்தில் மயங்கியதோடு, மறுபுறம் வண்ணமயமான நாட்டிய நிகழ்ச்சிகள் விழாக்கால சூழலை சிறப்பாக்கின. கலைஞர்கள் வழங்கிய மிளிரும் கலைநிகழ்ச்சிகள் பக்தர்களை மகிழ்வித்தன.
மொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து வந்த 26 கலைக்குழுக்களில் 568 கலைஞர்கள் பங்கேற்று, தங்கள் அபூர்வமான கலைநிகழ்ச்சிகளால் பல்லக்கு உற்சவத்துக்கு சிறப்பு சேர்த்தனர்.
கேரளாவிலிருந்து வந்த கலைஞர்கள் வழங்கிய மோகினியாட்டம், கோபிகா ந்ரித்யம் மற்றும் திருவாதிரகளி சிறப்பு ஈர்ப்பாக அமைந்தது. கர்நாடகக் கலைஞர்களின் மோகினி பஸ்மாசுர யக்ஷகானம் மற்றும் தசவாணி ந்ரித்யவைபவம், ராஜஸ்தானின் உற்சாகமான கல்பீலியா நாட்டியமும் பக்தர்களை கவர்ந்தன.
மேலும், மத்யபிரதேசத்தின் படை மற்றும் பழங்குடியினர் நாட்டியங்கள், சத்தீஸ்கர் மாநிலத்தின் ப்ராவ் பூஜா, பஞ்சாபின் உற்சாகமான பாங்க்ரா ஆகியவை விழாவின் பன்முக பண்பாட்டு அழகை உயர்த்தின.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் பாரம்பரியக் கலை வடிவங்களான திம்சா, கிட்டைய்யா லீலா, டமருக த்வனி விந்யாசம் மற்றும் செக்கா பஜனை ஆகியவை பல்லக்கு உற்சவத்துக்கு தெய்வீக ஒளி சேர்த்தன.
விழாவின் சிகர நிகழ்வான கருட சேவை இன்று இரவு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.