வசந்த பஞ்சமி.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை
வசந்த பஞ்சமி சிறப்பு பூஜையில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை செயல் அதிகாரி லோகநாதம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.;
வசந்த பஞ்சமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முதலில், கோவிலின் கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அர்ச்சகர்கள் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் செய்தனர். சதுர்தச கலசவாகனம், புண்யாகவாசனம் மற்றும் பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்று நிறைவாக பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு முன்பு, ஒவ்வொரு திங்கட்கிழமையும் வாராந்திர சேவையாக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பெரியவர்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஆகம அறிஞர்களின் ஆலோசனையின்படி, உற்சவ சிலைகள் தேய்மானம் அடைவதை தவிர்க்கும் வகையிலும், எதிர்கால சந்ததியினருக்கு இந்த உற்சவ மூர்த்திகளின் மகிமையை அறியச்செய்யவும், வசந்தோற்சவம், சஹஸ்ர கலசாபிஷேகம் மற்றும் விஷேஷபூஜை ஆகியவற்றை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தனம் முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆண்டு முதல், வசந்த பஞ்சமியைக் கொண்டாடுவதற்காக வருடாந்திர சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
இன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை செயல் அதிகாரி லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.