காசாவில் நடந்த தாக்குதலில் எனது குடும்பத்தினர் 40 பேரை இழந்துவிட்டேன்: சார்ஜாவில் வசிக்கும் பாலஸ்தீன பெண் கண்ணீர் பேட்டி

காசாவில் நடந்த தாக்குதலில் எனது குடும்பத்தினர் 40 பேரை இழந்துவிட்டேன் என்று சார்ஜாவில் வசிக்கும் பாலஸ்தீன பெண் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

Update: 2023-10-25 21:00 GMT

சார்ஜா,

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் போர் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் தனது மொத்த குடும்பத்தினரையும் பறி கொடுத்த சார்ஜாவில் வசிக்கும் பாலஸ்தீன பெண்ணான பிதா அல்லோ (வயது 39) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது எனது குடும்ப உறுப்பினர்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணமால் போயிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாகும் என பயப்படுகிறேன். வான்வழி விமான தாக்குதலில் எனது உறவினர் மற்றும் கைக்குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

உறவினர் முழு குடும்பமும் உயிரிழப்பு

மற்றொரு குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால் அது ஒரு காலை இழந்துள்ளது. மற்றொரு உறவினர் பெண்ணின் கணவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு காது கேட்காமல் உள்ளது. காசாவில் எங்களின் வீடு இடிந்து கிடக்கிறது. அது இடிபாடுகளின் குவியலாக மாறியுள்ளது.

மற்றொரு சம்பவத்தில் எனது தந்தையின் உறவினர் பெண் மற்றும் அவரது கணவர், குழந்தைகள், பேரக்குழந்தைகள் உள்பட முழு குடும்பமும் உயிரிழந்தது. அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பு குண்டு வீசி தாக்கப்பட்டது. அந்த பெண்ணின் பெயர் ஹுதா முகம்மது அல்லோ. குடும்பத்தினர் உயிரிழப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் உதவிக்காக பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

தங்க இடமில்லை

இதுபோல் மொத்தம் 40 பேரை எனது குடும்பத்தில் இருந்து நான் இழந்துவிட்டேன். எனது தாயார் மட்டும் நீரிழிவு நோய் பாதிப்பு காரணமாக சார்ஜாவில் என்னுடன் வசிக்கிறார். அவர் காசாவில் உள்ள சகோதரிகளிடம் பேசும்போது, `குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் கூடியுள்ளதாகவும், உயிரிழந்தால் ஒன்றாக இறப்போம்' என கூறியது எங்களால் தாங்க முடியவில்லை.

அங்குள்ளவர்களுக்கு தங்க இடமில்லை. மருத்துவமனைகளுக்கு இடம் தேடி சென்றால் அங்கேயும் பலர் கொல்லப்படுகின்றனர். இருப்பவர்களின் உயிர்களையாவது பாதுகாக்க வேண்டும் என விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கண்ணீர் விட்டு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்