“வேகநடை, மெதுநடை, ஜாக்கிங்...” தொப்பை கொழுப்பை குறைக்கும் வழிமுறைகள்

தொப்பை கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் சமதள பரப்பில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு பதிலாக சீரற்ற நிலப்பரப்பில் நடப்பது சிறந்தது.;

Update:2025-11-02 12:39 IST

தொப்பையில் படிந்திருக்கும் கொழுப்பை குறைப்பதற்கு எளிதான மட்டுமல்ல பயனுள்ள வழிமுறைகளில் ஒன்று நடைப்பயிற்சி. வழக்கமான நடைப்பயிற்சியுடன் சில மாற்றங்களையும் சேர்த்து செய்து வந்தாலே தொப்பை கொழுப்பு படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். 

வழக்கமாக அணியும் ஆடையை உடற்பயிற்சிக்கு செல்லும்போது அணிவதை தவிர்க்க வேண்டும். அதிக அடர்த்தி இல்லாத இலகுரக ஆடை அணிவது சிறந்தது. நடக்கும்போது உடலுக்கு தளர்வை ஏற்படுத்தி அதிக கலோரிகளை எரிக்க உதவும். தொப்பை கொழுப்பை குறைப்பதற்கும் வழிவகை செய்யும்.

தொப்பை கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் சமதள பரப்பில் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு பதிலாக மலை போன்ற உயரமான ஏற்றத்தாழ்வு கொண்ட இடங்கள், மேடு, பள்ளம் கொண்ட பாதை போன்ற சீரற்ற நிலப்பரப்பில் நடப்பது சிறந்தது. அது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை தீவிரப்படுத்த உதவிடும்.

தொப்பையை குறைக்க முயற்சிப்பவர்கள் நடைப்பயிற்சி செய்யும்போது நேராக நடக்க வேண்டும் என்றில்லை. கால்களை அங்கும் இங்கும் பக்கவாட்டு பகுதியில் வைத்தபடி நடக்கலாம். கை, கால்களை நன்றாக தூக்கியும், அசைத்தும் நடைப்பயிற்சியை தொடரலாம். அதிலும் கைகளை சுழற்றும் விதமாக வட்ட வடிவிலோ, ஸ்கிப்பிங் செய்வது போன்றோ அசைப்பது தசைகளை இயங்க வைக்கும்.

நடக்கும் போது முதுகை நேராகவும், தண்டுவட பகுதியை இறுக்கமாகவும் வைத்திருங்கள். இது வயிற்று தசைகளை வலுப்படுத்தும். கொழுப்பு குறைவதற்கு வழிவகை செய்யும்.

ஒரே சீரான வேகத்தில் நடக்க வேண்டாம். சில நிமிடங்கள் வேகமாக நடங்கள். பின்பு சில நிமிடங்கள் மெதுவாக நடை பயிலுங்கள். பின்பு ஜாக்கிங் செய்வதற்கு சில நிமிடங்களை ஒதுக்குங்கள். இந்த உடற்பயிற்சி மாற்றமானது, கொழுப்பை எரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த நடைப்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது நல்ல பலனை கொடுக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்