வெள்ளை புகை வெளியேறியது; புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்
வெற்றி பெற்ற புதிய போப் ஆண்டவர் 89 ஓட்டுகளை பெற்றிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.;
வாடிகன் நகரம்,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் 26-ந்தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நடைமுறைகளுக்குப்பின் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதற்காக, சிஸ்டைன் ஆலயத்தில் 80 வயதுக்கு உட்பட்ட 133 கார்டினல்கள் கூடி தங்களுக்கு உள்ளேயிருந்து ஒருவரை அடுத்த போப் ஆண்டவராக தேர்வு செய்வார்கள். அதில் 3-ல் 2 பங்கு ஆதரவு பெறும் (89 வாக்குகள்) கார்டினல் புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுவார்.
எனினும், புதிய போப்பை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நடந்து வருகிறது. இதற்கான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. ஆனால், அது தோல்வி அடைந்தது. இதனை உணர்த்தும் வகையில் சிம்னி வழியே, கரும்புகையை வெளியேற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 2-வது நாளாக கார்டினல்கள் கூடிய நிலையில், வாக்கெடுப்பு இன்றும் தோல்வி அடைந்தது. இதனை உணர்த்தும் வகையில் சிம்னி வழியே மீண்டும், கரும்புகையை வெளியேற்றி அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என குறிக்கும் வகையில், சிம்னியில் இருந்து இன்றிரவு வெள்ளை புகை வெளியேறியுள்ளது. இதனால், வெற்றி பெற்றவர் 89 ஓட்டுகளை பெற்றிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் ஆரவாரத்தில் கூச்சலிட்டனர். புதிய போப்பின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.
அப்போது, தலைமை கார்னல், செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் இருந்து நமக்கு ஒரு போப் கிடைத்து விட்டார் என லத்தீனில் கூறுவார். இதன்பின்னர், வெற்றி பெற்றவரின் பிறந்தபோது வைக்கப்பட்ட பெயரை லத்தீனில் கூறுவார். அதன்பின்பு, அவரை அழைப்பதற்கான பெயர் வெளியிடப்படும்.
இதனை தொடர்ந்து, முதன்முறையாக அதே செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் இருந்து பொதுமக்கள் முன் புதிய போப் ஆண்டவர் தோன்றி, ஆசி வழங்குவார்.