அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கடும் சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள்

டைட்டன், லார்சன் அண்ட் டூப்ரோ, மாருதி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை லாபத்துடன் காணப்பட்டன.;

Update:2025-08-28 19:05 IST

மும்பை,

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பின்னர் இந்திய பங்கு சந்தை வர்த்தகம் இன்று காலை மீண்டும் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகள் கடும் வீழ்ச்சியை கண்டன.

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு கடந்த 27-ந்தேதி அதிகாலை 12.01 மணியளவில் அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்து மொத்தம் 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய பங்கு சந்தை வர்த்தகம் இன்று தொடங்கியது முதல் சரிவு கண்டது. முந்தைய வர்த்தக நாளான கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 2.66 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

இந்த சூழலில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 706 புள்ளிகள் குறைந்து 80,080.57 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் ஆனது. மும்பை பங்கு சந்தையின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.449 லட்சம் கோடியில் இருந்து ரூ.445 லட்சம் கோடி என சரிந்தது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 211 புள்ளிகள் சரிந்து, (1 சதவீதம்) 24,500.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நடந்தது. அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் பங்கு சந்தையில் எதிரொலித்து உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

எச்.சி.எல். டெக், இன்போசிஸ், பவர் கிரிட், டி.சி.எஸ்., எச்.டி.எப்.சி. வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், பாரதி ஏர்டெல் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய நிறுவன பங்குகள் கடுமையான சரிவை கண்டன. எனினும், டைட்டன், லார்சன் அண்ட் டூப்ரோ, மாருதி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை லாபத்துடன் காணப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்