உ.பி.: நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
விபத்தில் 75 பேர் படுகாயமடைந்தனர்;
லக்னோ,
டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் டெல்லி உத்தரபிரதேசத்தின் ஆக்ரா இடையேயான எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று கோர விபத்து ஏற்பட்டது. உத்தரபிரதேசத்தின் மதுரா அருகே இந்த விபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மையால் சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகின.
8 பஸ்கள், 3 கார்கள், வேன்கள் என பல வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விபத்தில் 75 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.