தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன...? - நிதி அமைச்சகம் பரபரப்பு விளக்கம்
தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.;
புதுடெல்லி,
நம் நாட்டில் அணிகலன்களாகவும், மிகப்பெரிய சொத்தாகவும் இருப்பது தங்கம். இந்த மஞ்சள் உலோகம் மீது காதல் கொள்ளாதவர்களே இருக்க முடியாது. இத்தனை சிறப்புடைய தங்கத்தின் விலைதான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவின் மீது தொடுத்த வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதேபோல அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை கணிசமாக குறைத்துவிட்டு, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை திசை திருப்ப தொடங்கி உள்ளனர்.
பெரும்பாலானோர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு மதிப்புமிக்க மஞ்சள் உலோகமான தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை உலக அளவில் கணிசமாக அதிகரிக்க செய்துள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், தங்கம் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
தங்கம் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை. சர்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை, வரிகள் ஆகியவை அடிப்படையில், தங்கம், வெள்ளி விலை தீர்மானிக்கப்படுகிறது. நடப்பாண்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
தற்போதைய விலை உயர்வுக்கு புவிஅரசியல் பதற்றம் அதிகரித்து வருவதும், சர்வதேச வளர்ச்சி குறித்த நிச்சயமற்ற நிலையும்தான் காரணங்கள். அதனால் பாதுகாப்பான முதலீட்டு தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் தங்கத்தை கணிசமாக கொள்முதல் செய்கின்றன.
நுகர்வு, முதலீடு என இருவிதங்களில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. அவை பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகின்றன. வீட்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு உயர்வதால், தங்கம் விலை உயர்வை குடும்ப சொத்து உயர்வாக மக்கள் பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.