வரைவு வாக்காளர் பட்டியல்.. மேற்கு வங்காளத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
போலி வாக்காளர்கள், வேறு இடங்களுக்கு குடியேற்றம், மரணம் அடைந்தவர்கள் என பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பலர் நீக்கப்பட்டு உள்ளனர்.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) நடந்து வருகிறது. எஸ்ஐஆர் பணிகளின் ஒரு பகுதியாக 3 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரேதங்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.
அதன்படி, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்களிலும் புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதில், மேற்கு வங்காளத்தில் 58 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் 24 லட்சம் பேர், இடம்பெயர்ந்தவர்கள் 19 லட்சம் பேர், போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் பேர் என 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மொத்தம் 58,20,898 வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும், அவர்களில், இறந்ததாக அடையாளம் காணப்பட்ட சுமார் 24,16,852 வாக்காளர்கள், இடம்பெயர்ந்த 19,88,076 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன என்றும், 12,20,038 வாக்காளர்கள் அடையாளம் காணப்படாத, காணாமல்போன வாக்காளர்கள் என்றும், 1,38,328 பெயர்கள் போலி வாக்காளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும், பிற காரணங்களுக்காக 57,604 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.