வந்தே மாதர பாடலின் 150-ம் ஆண்டு கொண்டாட்டம்; 2,500 கலைஞர்கள் கலாசார நடனம் ஆடி அசத்தல்
இந்தியாவின் கலாசார செறிவையும் மற்றும் ஒற்றுமையையும் நடனத்தின்போது வெளிப்படுத்தினர்.;
புதுடெல்லி,
நாட்டின் 77-வது குடியரசு தினம் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் இன்று கொண்டாடப்பட்டது. இதில், நடப்பு ஆண்டில், வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டு கால கொண்டாட்டமும் நடைபெற்றது.
இதனையொட்டி, டெல்லி கடமை பாதையில் கண்ணை கவரும் வகையில் கலாசார நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அப்போது வந்தே மாதர பாடலின் இசைக்கு ஏற்ப 2,500 கலைஞர்கள் கலாசார நடனம் ஆடி அசத்தினர். இதனை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்தபடி பிரதமர் மோடி உள்பட பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
நடன கலைஞர்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாசார பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையிலான வண்ணமிகு ஆடைகளை அணிந்து, இந்தியாவின் கலாசார செறிவையும் மற்றும் ஒற்றுமையையும் நடனத்தின்போது வெளிப்படுத்தினர். அவர்கள் நாட்டுப்புற மற்றும் பாரம்பரியம் சார்ந்த பாடல்களுக்கும் நடனம் ஆடி, வந்தே மாதரம் பாடலுக்கு மரியாதை செலுத்தினர்.
1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி வங்காள கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடல், இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது. இந்த பாடலானது நாட்டின் நாகரிக, அரசியல் மற்றும் கலாசார உணர்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.
தேசிய பெருமையையும், ஒற்றுமையையும் தொடர்ந்து தூண்டி வரும் வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனை நினைவுகூரும் வகையில், ஓராண்டுக்கு தேசிய பாடல் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
இதனை முன்னிட்டு இன்று, சுதந்திரத்திற்கான மந்திரம் வந்தே மாதரம், வளத்திற்கான மந்திரம் சுயசார்பு இந்தியா என்ற கருத்துருக்களுடன் கூடிய அணிவகுப்பு வாகனங்கள் இடம்பெற்றன. மத்திய அரசு சார்பில் போட்டிகளும் நடத்தப்பட்டன.
இதேபோன்று, குடியரசு தினத்தில் ராணுவம், கடற்படை மற்றும் விமான படை என முப்படைகளின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெற்றன.
இதனை, ஜனாதிபதி முர்மு, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் உள்ளிட்டோரும் கண்டுகளித்தனர்.