குடியரசு தின விமான சாகசத்தில் அசத்தல்... பார்வையாளர்களை நோக்கி மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் வந்த போர் விமானம்
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை நினைவுப்படுத்தும் வகையில், ரபேல், மிக், சுகோய் மற்றும் ஜாகுவார் விமானங்களின் விமான சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.;
புதுடெல்லி,
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரிய செறிவை கவுரவிக்கும் வகையில் டெல்லி கடமை பாதையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்க, 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு விரிவான கண்காணிப்பு பணிகளும் நடந்து வருகின்றன.
இந்த தினத்தில் இந்திய விமான படையின் விமானிகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி ஆச்சரியப்படுத்தினர். 5 வெவ்வேறு தளங்களில் இருந்து சீறி பாய்ந்த விமானங்கள் வானில் அணிவகுத்து சென்று பார்வையாளர்களை பரவசப்படுத்தின. 16 போர் விமானங்கள், 4 போக்குவரத்து விமானங்கள் மற்றும் 9 ஹெலிகாப்டர்கள் என மொத்தம் 29 விமானங்கள் இதில் கலந்து கொண்டன.
இதில், வி என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் விமானங்கள் சென்றன. அப்போது, ஒரே உயரத்தில் விமானங்கள் பறந்தன. பின்னர், வஜ்ரங் வடிவிலான சாகசத்தின்போது, 6 ரபேல் போர் விமானங்கள் வானில் அதிக துல்லியத்துடன், வலிமை மற்றும் போருக்கு தயாராவதற்கான முறையை பிரதிபலிக்கும் வகையில் பறந்து சென்றன.
திரிசூல வடிவிலான விமான சாகசத்தின்போது, அதற்கு பின்னால் ரபேல் போர் விமானம், மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறந்து சென்றது. அப்போது, ராஜபாதையின் வடக்கே நீர்வழியின் மேலே பறந்தது. தரையில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் இந்த விமான சாகசம் நிகழ்த்தப்பட்டது. பார்வையாளர்களை நோக்கி அதிவிரைவாக வந்த அந்த விமானம், அப்படியே மேலே எழுந்து பறந்து சென்றது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அப்போது, விமானம் மிக தாழ்வாக அதேநேரத்தில் விரைவாக பறந்தது. இது விமானியின் திறமை, விமானத்தின் ஆற்றல், நம்ப முடியாத அளவிலான உந்துசக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தின.
இதேபோன்று, ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை நினைவுப்படுத்தும் வகையில், ரபேல், மிக், சுகோய் மற்றும் ஜாகுவார் விமானங்களை உள்ளடக்கிய விமான சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.