காஷ்மீரில் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து காணப்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியவில்லை.;
காஷ்மீர்,
காஷ்மீரில் கடந்த 23-ந் தேதி புதிதாக பனிப்பொழிவு தொடங்கியது. அதனால் 270 கி.மீ. நீளம் கொண்ட ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, பனியால் மூடியது. நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. நெடுஞ்சாலை மூடப்பட்டது. பனிக்கட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. நெடுஞ்சாலை, பகுதி அளவுக்கு சீர்செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகளை அப்புறப்படுத்தும் பணி முடங்கியது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. நஷ்ரி, நவ்யுக் ஆகிய சுரங்கப்பாதைகளுக்கு இடையே நின்ற வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன.
ஸ்ரீநகர் உள்பட காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு நிலவியது. ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வரும் விமானங்களின் சேவை பாதிக்கப்படவில்லை. ரெயில் போக்குவரத்தும் வழக்கம்போல் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, காஷ்மீரில் கடும் குளிரில் இருந்து சிறிது நிவாரணம் கிடைத்தது. பெரும்பாலான இடங்களில் இரவுநேர குறைந்தபட்ச வெப்பநிலை சற்று உயர்ந்தது. இருப்பினும், உறை நிலைக்கு சற்று கீழேயே நீடித்தது.
ஸ்ரீநகரில், குறைந்தபட்ச இரவுநேர வெப்பநிலை மைனஸ் 1.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. மலை மாநிலமான இமாசலபிரதேசத்திலும் பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து காணப்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலையில் நீண்ட வரிசையில் நின்றிருந்தன.