திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தைச் சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம்
4 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.;
திருமலை,
திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய வேற்று மதத்தைச் சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருமலை-திருப்பதி தேவஸ்தானம், ஆந்திர மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டதாகும். தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். இந்துக்கள் அல்லாத பிற வேற்று மதங்களை சேர்ந்தவர்கள் பணியாற்ற அனுமதியில்லை. வேற்று மதங்களை சேர்ந்தவர்களை பணியிடை நீக்கம் செய்வது அல்லது அவர்கள் கேட்டுக்கொண்டால் அரசு துறைக்குப் பணியிட மாற்றம் செய்ய ஏற்பாடு செய்வது என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பதி தேவஸ்தானத்தில் வேற்று மதத்தை பின்பற்றுபவர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர். 4 ஊழியர்களும் தேவஸ்தானத்தின் நடத்தை விதிகளை பின்பற்றவில்லை என்றும், ஒரு இந்து மத அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி பணிபுரிந்த ஊழியர்களாக, தங்கள் கடமைகளை செய்யும்போது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது . இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.